அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
குமரி மாவட்டத்தில் ெகாரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அடுத்த அலை
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 0.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த 9-ந் தேதி நிலவரப்படி 2.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது அடுத்த அலையை நோக்கி செல்வதை தெளிவாக உறுதிபடுத்துகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனா மரணத்திற்கு எதிராக 97 சதவீத பாதுகாப்பையும், ஒரு டோஸ் போட்டுக் கொள்வது 76 சதவீத பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.
அதாவது தடுப்பூசி போடாதவர்கள் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 200 பேர் மரணமடைகிறார்கள். அதுவே ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் 72 பேர் மட்டுமே மரணமடைவார்கள். மேலும் 2 டோஸ் போட்டுக் கொண்ட 10 ஆயிரம் பேரில் 6 பேர் மட்டுமே மரணமடைவர். இதன் மூலம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனா மரணங்களை பெருமளவில் தவிர்க்க உதவியுள்ளது.
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 571 குழுக்கள் மொத்தம் 2,284 இடங்களில் தடுப்பூசி போட உள்ளார்கள். முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதே சமயம் சுகாதார பணியாளர்கள், அரசு துறைகளைச் சார்ந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். "தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது ஒரு சாதாரண சளிக்காய்ச்சல்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.