ஈரநிலங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்


ஈரநிலங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்
x

குமரி மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி

குமரி மாவட்ட வனத்துறையின் சார்பில் சுசீந்திரம் பெரிய குளம் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவிகளிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள 75 குளங்களுக்கு ராம்சார் அங்கீகார சான்று வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் பெரிய குளம் மற்றும் வேம்பனூர் குளமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுசீந்திரம் பெரிய குளத்தை பொறுத்தவரையில் கறுப்பு ஐபிஸ், நெடுங்கால் உள்ளான், செம்பட்டை தலை கடல் புறா, மஞ்சள் மீசை ஆள்காட்டி, நீலமார்பு நாணல் காடை, வெண்கல சிறகு ஜசானா, மாடுமேச்சான் கொக்கு, நீலத்தோள் வாத்து, செம்பட்டை பிட்டர்ன், சாதா செங்கால் உள்ளான், சாதா மணல் உள்ளான் உள்ளிட்ட சுமார் 75 -க்கும் அதிகமான பறவையினங்கள் குளிர்காலங்களில் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து செல்வதற்கான இயற்கை சூழல் வாய்ந்த குளமாக உள்ளது. இந்த குளங்களை பாதுகாப்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானதாகும்.

கட்டுரை போட்டி

குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற பல முயற்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதோடு குமரி மாவட்டத்திற்குட்பட்ட ஈர நிலங்களை பாதுகாக்க அனைவரும் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி என் ஈர நிலம், என் பெருமை என்ற தலைப்பில் மாணவிகளிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார், வனவர் ரூபன் குமார், கல்லூரி மாணவிகள், வன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story