இடை நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இடை நின்ற மாணவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் களப்பணி மேற்கொண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உமா பேசினார்.
மாவட்டக்குழு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 6 முதல் 12 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மாதாந்திர மாவட்ட அளவிலான 3 அடுக்குக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கினார்.
இதில் கலெக்டர் உமா பேசியதாவது:-
பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணிக்க பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் வட்டார அளவிலான குழு கூட்டம் மாதம் இருமுறை நடத்தப்பட வேண்டும். வட்டார அளவில் தீர்வு காண வேண்டிய பகுதிகள் குறித்து மாவட்ட குழு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளி செல்லா குழந்தைகள்
நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் நடைபெற்ற பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் 4,950 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் 2,995 குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
பிற துறை அலுவலர்கள் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் செய்து கொடுக்க வேண்டும்.
இடை நின்ற மாணவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அழகு, குழந்தைகள் உதவி மையம் மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து களப்பணி மேற்கொண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உமா பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.