போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஒவ்வொருவரின் பங்கும் முக்கியம்
போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஒவ்வொருவரின் பங்கும் முக்கியம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஒவ்வொருவரின் பங்கும் முக்கியம் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
போதை பழக்கத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து துறை சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போலீஸ், பள்ளி கல்வி துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் தினமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.இந்த ஊர்வலத்தினை மாவட்ட கலெக்டா் சாருஸ்ரீ தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தொடா்ந்து கலெக்டர் பேசுகையில், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.
ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம்
குடும்பத்தினர், நண்பர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அதே போன்று, போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிபடுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பழைய பஸ்நிலையம், பனகல் சாலை வழியாக சென்று திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
500 பேர் பங்கேற்பு
இந்த ஊர்வலத்தில் திருவாரூரில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் முதன்மைக்கல்விஅலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூகநல அலுவலர் கார்த்திகா, திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகராட்சி மேலாளர் முத்துகுமார் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.