ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது;அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஈரோட்டில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஈரோட்டில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர்கள் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று ஓட்டு சேகரித்தனர். அப்போது அவர்கள் வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு ஓட்டு கேட்டார்கள்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் நடந்தே சென்று வாக்கு சேகரித்தோம். அப்போது வாக்காளர்களிடம் அவரது பெயரையும், முதல்-அமைச்சரின் சாதனைகளையும் எடுத்து கூறும்போது மக்கள் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நற்பெயருக்காகவும், பெரியார் குடும்பத்துக்காகவும் வாக்களிப்போம் என்று மக்கள் வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிர் அணியில் இருப்பவர்கள் இன்னும் களத்துக்கே வரவில்லை. வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக தி.மு.க., காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசாரத்தின்போது ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் குமார் முருகேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், பகுதி செயலாளர்கள் வேலு, ஜெயின், சுதாகர், முரளி, வார்டு செயலாளர் மகேஸ்வரன், கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், தி.மு.க. பிரமுகர் கேபிள் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.