ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கை சின்னத்தில் வெற்றி பெற வைக்கவீதி வீதியாக சென்று தேர்தல் பணியாற்றும் அமைச்சர் சு.முத்துசாமி


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கை சின்னத்தில் வெற்றி பெற வைக்கவீதி வீதியாக சென்று தேர்தல் பணியாற்றும் அமைச்சர் சு.முத்துசாமி
x

அமைச்சர் சு.முத்துசாமி

ஈரோடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்காக அமைச்சர் சு.முத்துசாமி வீதி வீதியாக சென்று தேர்தல் பணியாற்றி வருகிறார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஓட்டு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கை சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு வாக்குகள் கேட்டு தி.மு.க.வின் அனைத்து நிலை தலைவர்கள், அமைச்சர்கள் ஈரோட்டில் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தேர்தலுக்கான பொறுப்பு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சு.முத்துசாமியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். அந்த பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சு.முத்துசாமி இரவு பகல் பாராமல் தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

எங்கும் நிறைந்திருப்பவர்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவர் இந்த பணியில் தீவிரமாக உள்ளார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றுவது என தேர்தல் களத்தை சுறுசுறுப்பாக இயங்க வைத்தார். பிரசாரத்துக்காக ஈரோடு வரும் அத்தனை அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஒருவர் விடாமல் அனைவரையும் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவது. எந்த பகுதியில் முக்கிய அமைச்சர்களின் பிரசாரம் நடந்தாலும் அவர்களுடன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இணைந்தே செல்வது, வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு கேட்க செல்லும் போது உடன் இருப்பது என்று எங்கும் நிறைந்து இருப்பவராகவே ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பார்க்கிறார்கள்.

இரவு வரை தேர்தல் பிரசாரம் முடிந்து, பின்னர் அடுத்த நாள் மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் காலையிலேயே கிழக்கு தொகுதியின் ஒவ்வொரு வீதியாக உலா வருகிறார் அமைச்சர் முத்துசாமி. ஒவ்வொரு வீதியிலும் மக்களை சந்தித்து புன்னகையுடன் நலம் விசாரிக்கிறார். காரில் சென்றாலும், காரின் கண்ணாடியை இறக்கி விட்டு, மக்களை நலம் விசாரித்து செல்வது அனைவரையும் கவருவதாக உள்ளது.

பிரசார பாதை

அதுமட்டுமின்றி, முக்கிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும் போது அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளை முன்கூட்டியே சென்று பார்வையிடுவதுடன், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து அமையவும், தலைவர்கள் பேசும் இடங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு தேர்வு செய்து வருகிறார்.

அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நேற்று தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று தேர்தல் பிரசார பாதையை பார்வையிட்டார். அவருடன் துணை செயலாளர் ஆ.செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கூட்டணி கட்சி என்றாலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்காக தி.மு.க. தலைவரின் கட்டளையை ஏற்று முழுமையாக தேர்தல் பணியாற்றும் அமைச்சர் முத்துசாமியின் பணியை பார்த்து கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி காங்கிரசார், கூட்டணி கட்சியினரும் முழுமையாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story