முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்


முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
x

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

மாத ஓய்வூதியம்

விளையாட்டுத்துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளாக தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதலிடம் அல்லது இரண்டாமிடம் அல்லது மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்று வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்.

19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

இதற்கான வயது வரம்பு கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் (வெட்டரன் அல்லது மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகள்) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களில் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story