இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலன் கைது
காதலித்த போது நெருக்கமாக இருந்த படங்களை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து அவர் ஏமாற்றியதும் அம்பலமானது.
நாகர்கோவில்,
காதலித்த போது நெருக்கமாக இருந்த படங்களை காட்டி இளம்பெண்ணை மிரட்டிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து அவர் ஏமாற்றியதும் அம்பலமானது.
திருமணமானதை மறைத்து காதல்
கேரள மாநிலம் மூணார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 39). இவர் மதுரை ஐகோர்ட்டில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அங்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒரு இளம்பெண் ஊழியராக பணியாற்றினார்.
அப்போது இளம்பெண்ணுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. அந்த சமயத்தில் காதல் ஜோடியினர் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜ்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்ற அதிர்ச்சி தகவல் இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. மேலும் அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதனை தொடர்ந்து இளம்பெண் ராஜ்குமாருடன் பேசுவதை தவிர்த்தார். அத்துடன் அவருடன் ஏற்பட்ட காதலையும் முறித்து கொண்டார். ஆனால் ராஜ்குமார் தன்னை காதலிக்கும்படி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார்.
பணம் கேட்டு மிரட்டல்
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜ்குமார், காதலித்த பெண்ணை அவமானப்படுத்த திட்டமிட்டார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் இந்த படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினார்.
உடனே இதுகுறித்து இளம்பெண் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
கைது
பின்னர் ராஜ்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கொட்டாரம் பகுதிக்கு வந்த ராஜ்குமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிைறயில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்த ராஜ்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.