கடையில் ரூ.3½ லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது


கடையில் ரூ.3½ லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபலமான கடையில் ரூ.3½ லட்சம் திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபலமான கடையில் ரூ.3½ லட்சம் திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கடையில் பணம் திருட்டு

நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் மேலாளராக தெங்கம்புதூர் சர்ச் தெருவை சேர்ந்த இம்மானுவேல் (வயது 39) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி சென்றார். பின்னர் நேற்றுமுன்தினம் காலையில் கடையை திறந்த அவர் ஊழியர்களுடன் உள்ளே நுழைந்தார்.

அப்போது கடையில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 300 மாயமாகி இருந்தது. ஆனால் லாக்கரும் பூட்டப்பட்டு தான் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இம்மானுவேல் இதுபற்றி நேசமணி நகர் போலீசில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடை முழுவதும் சோதனை நடத்தினர்.

வாலிபர் கைது

மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், கடையில் மர்மஆசாமி ஒருவர் அங்குமிங்குமாக நடமாடியதும், பின்னர் அவர் நைசாக லாக்கரை திறந்து அதில் வைக்கப்பட்ட பணத்தை திருடி விட்டு கடையின் மேல்தளம் வழியாக தப்பிச் சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் பணத்தை திருடிய ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வடசேரி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 34) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

முன்னாள் ஊழியர்

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், நாகராஜன் இதற்கு முன்பு அந்த கடையில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். சில காரணங்களால் நாகராஜனை கடை நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது. இதனால் கடையில் எங்கு பணம் வைப்பார்கள், பணம் வைக்கும் லாக்கர் சாவி எங்கு இருக்கும் என்ற விவரங்கள் அவருக்கு தெரிந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று கடையில் வாடிக்கையாளர்கள் போல உள்ளே நுழைந்த நாகராஜன் ஒரு அறையில் யாருக்கும் தெரியாமல் பதுங்கி கொண்டார். ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றதும், சாவியை எடுத்து லாக்கரில் உள்ள பணத்தை திருடி விட்டு கடையின் மாடி வழியாக நாகராஜன் தப்பி சென்றதாக தெரிவித்தனர்.

வேலை பார்த்த கடையில் முன்னாள் ஊழியர் திருடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story