இணை பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவே இல்லை முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேச்சு
இணை பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதிக்கவே இல்லை என்று நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டி பேசினார்.
ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சரோஜா, சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
அ.தி.மு.க., கோட்டையில் 2021 சட்டசபை தேர்தலில், சிறிது தோய்வு காரணமாக, 4 தொகுதிகளை இழந்துவிட்டோம். மீண்டும் அ.தி.மு.க., கோட்டையாக நாமக்கல் மாவட்டம் இருக்க வேண்டும். அதற்கு நாம் இப்போது இருந்தே தயாராக வேண்டும்.
தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம்
நாம் ஆட்சியில் இருக்கும்போதே தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை அழைத்து துணை முதல்-அமைச்சர் ஆக்கினோம். பின்னர் 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தினார். பல்வேறு திட்டங்களை தந்து சிறப்பாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முதலில் முட்டுக்கட்டை போட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்கள் கழித்து சம்மதம் தெரிவிக்க வைத்தோம்.
கடந்த மாநிலங்களவை தேர்தலில் முதலில் வேட்பாளர்களை தி.மு.க. அறிவித்தது. வழக்கமாக நாம்தான் அறிவிப்போம். இரட்டை தலைமை இருப்பதால்தான் நம்மால் விரைந்து முடிவு எடுக்க முடியவில்லை என்று எல்லோரும் பேச தொடங்கினர். எனவேதான் ஒற்றை தலைமை வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அப்படி இருந்தால்தான் தி.மு.க.வை எதிர்க்க முடியும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தனர். இணை பொதுச்செயலாளர் பதவி தருகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினோம். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எந்த பயனும் இல்லை. அதனால்தான் நாங்கள் பேச்சுவார்த்தையை கைவிட்டு விட்டோம்.
கோட்டையாக மாற்றிவிடலாம்
நம் கட்சியில் உழைத்தால், அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நீங்கள் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுத்தால் நாமக்கல் மாவட்டத்தை மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதா, நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் டி.எல்.எஸ்.காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபிநாத், ராஜா என்கிற செல்வகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சரியான செய்தியை வெளியிட்ட "தினத்தந்தி"
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, கடந்த 1-ந் தேதி நாளிதழ்களில் அ.தி.மு.க. தொடர்பாக வந்த செய்தியை அ.தி.மு.க.வினர் தவறாக நினைத்து விடாதீர்கள். அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தடையாணை பெற்று விட்டது போல குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் 'தினத்தந்தி' நாளிதழ் மட்டுமே சரியான செய்தியை வெளியிட்டது. அதாவது, கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அளித்து இருப்பதாக பிரசுரித்து இருந்தது. அதுதான் சரியான செய்தி என்றார்.