சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை


சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் வெங்கடகிருஷ்ணன்.

அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.73 லட்சத்து 78 ஆயிரம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.

நிரூபிக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கு ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் வெங்கடகிருஷ்ணனும், மஞ்சுளாவும் வருமானத்துக்கு அதிகமாக 700 சதவீதம் சொத்துகளை குவித்து உள்ளனர். போலீஸ் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதால், இருவரையும் குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன்.

அவர்களை விடுதலை செய்த சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து முடிவு செய்ய, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இருவரும் நேரில் ஆஜராகினர்.

3 ஆண்டு சிறை

அவர்களிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி கேட்டபோது, ''இந்த வழக்கினால் இருவரும் கடந்த 27 ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வருகிறோம். அதனால், குறைந்த தண்டனை வழங்க வேண்டும். அந்த தண்டனையும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் விதமாக நிறுத்தி வைக்க வேண்டும். அதுவரை கீழமை கோர்ட்டில் சரணடைய அவகாசம் வழங்க வேண்டும்'' என்று இருவரும் பதில் அளித்தனர்.

இதையடுத்து, வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

மனைவிக்கும் சிறை

வெங்கடகிருஷ்ணன் மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய அவருக்கு கால அவகாசமும் வழங்கினார்.


Next Story