சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன்கள், மகளுக்கு 3 ஆண்டு சிறை
முன்னாள் அமைச்சர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், அவருடைய 2 மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் வேலக்குறிச்சியை சேர்ந்தவர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் (வயது 78). இவர் 13-5-1996 முதல் 14-5-2001 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் அமைச்சர் ஆவதற்கு முன்பு அவருக்கு ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 219 வருமானம் இருந்தது. பதவி முடியும்போது செங்குட்டுவன் மற்றும் அவருடைய மகன்கள், மகள்களின் சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 1 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆகும்.
சொத்து குவிப்பு வழக்கு
அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் செங்குட்டுவன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வருமானத்துக்கு அதிகமாக ரூ.81 லட்சத்து 42 ஆயிரத்து 977 மதிப்பில் (163.45 சதவீதம் அதிகம்) சொத்து குவித்ததாக, கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனுடன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, அவரது கணவரும் முன்னாள் ராணுவ வீரருமான ராஜலிங்கம், செங்குட்டுவனின் தம்பி வடமலையின் மகள் வள்ளி ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு தனி கோர்ட்டில் நடந்து வந்தது.
அ.தி.மு.க.வில் இணைந்தார்
இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு அதிருப்தி காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகிய செங்குட்டுவன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இதனால் செங்குட்டுவன் மீது அ.தி.மு.க. அரசால் தொடரப்பட்ட ஊழல் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று அப்போது அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த வழக்கு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டதுடன் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே 2021-ம் ஆண்டு செங்குட்டுவன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.
மரணம்
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு செங்குட்டுவன் உயிரிழந்தார். முன்னதாக அவருடைய மருமகன் ராஜலிங்கம் 22-3-2017 அன்று இறந்துவிட்டார்.
மீதமுள்ள 4 பேர் மீதான வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நீதிபதி கே.பாபு முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 101 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
தலா 3 ஆண்டு சிறை
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகியோர் நேற்று காலை கோர்ட்டுக்கு வந்திருந்தனர். 4 பேரும் நீதிபதி முன் ஆஜரானார்கள். இதைத்தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும், 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி கே.பாபு தீர்ப்பு கூறினார்.
இதைத்தொடர்ந்து 4 பேரும் அபராதத்தை கோர்ட்டில் உடனடியாக செலுத்தினர். பின்னர் 4 பேரும் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றனர்.