சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரர் கைது
ஜோலார்பேட்டை அருகே சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை அருகே பெரியமூக்கனூர், லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55), விவசாயி. இவருக்கும் இவரது சித்தப்பா ராமன் மற்றும் அவரது மகன் சிவக்குமார் (46), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சாணம் கொட்ட கோவிந்தசாமி சென்றபோது அங்கிருந்த சிவக்குமார் இங்கு ஏன் வந்தாய் உன்னை ஒழித்து விடுவேன் என தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் இருந்த கல்லை தூக்கி கோவிந்தசாமியின் தலைமீது வீசியுள்ளார். மேலும் அவரது மனைவி ஆஷா (35) கைகளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோவிந்தசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் சிவக்குமார், ஆஷா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.