முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x

சுசீந்திரம் அருகே முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் சங்கர் நகரை சேர்ந்தவர் ஜெய பிரசாத் (வயது 55), ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி குமாரிசாந்தி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகள் பிரீத்திக்கு திருமணம் ஆகி விட்டது.

ஜெயபிரசாத் ஓய்வு பெறுவதற்கு முன்பே பாடி எண் 40727 -12 என்ற எண் கொண்ட டி.பி.பி.எல். துப்பாக்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கி உரிமத்தையும் முறைப்படி புதுப்பித்துள்ளார். ஜெயபிரசாத் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். அப்போது அவர் துப்பாக்கியை எடுத்து செல்வது வழக்கம்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் குமாரி சாந்தி சமையல் செய்து கொண்டு இருந்தார்.அப்போது ஜெயபிரசாத் படுக்கை அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் குமாரி சாந்தி பதற்றத்துடன் படுக்கை அறைக்கு ஓடி சென்று பார்த்தார். அப்போது அங்கு ஜெயபிரசாத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜெயபிரசாத் உடலை பார்த்து குமாரி சாந்தி கதறி அழுதார்.இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆஷாஜெபகர், கபிரியேல், ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கியில் ஜெயபிரசாத் கைரேகை தான் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

விசாரணை

அதைத்தொடர்ந்து மாடி வீட்டில் குடியிருந்தவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராணுவ வீரர் ஜெயபிரசாத் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காந்திமதி விசாரணை நடத்தி வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 3½ மணி நேரம் ஆம்புலன்சிலேயே


இருந்த முன்னாள் ராணுவவீரர் உடல்

ஜெயபிரசாத் வீட்டுக்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பகல் 11.45 மணிக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பகல் 12.15 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. தனியார் ஆம்புலன்சில் உடலுடன் போலீஸ் அதிகாரியோ, போலீசாரோ செல்லவில்லை. இதனால் முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரசாத் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சிலேயே இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு போலீசார் வந்து ஜெயபிரசாத் உடலை பிணவறையில் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதைத்தொடர்ந்து பிணவறையில் ஜெயபிரசாத் உடல் வைக்கப்பட்டது.



Next Story