முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.7 லட்சம் நகைகள் கொள்ளை


முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.7 லட்சம் நகைகள் கொள்ளை
x

கடையநல்லூரில், முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில், முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கதவை உடைத்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

முன்னாள் ராணுவ வீரர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைகுளம் அருகே பண்பொழி சாலையில் வசிப்பவர் ராஜ்குமார். முன்னாள் ராணுவ வீரர். தற்போது சொக்கம்பட்டியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரவு காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கிரண்குமார் சென்னையிலும், மகள் நியூசிலாந்திலும் வசித்து வருகிறார்கள்.

கதவு உடைப்பு

நேற்று முன்தினம் மாலை மனைவி சுமித்ராவை சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு தனியார் கல்லூரிக்கு இரவு காவலாளி வேலைக்கு சென்றார்.

பின்னர் நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி ஹார்ட் டிஸ்க் மற்றும் வயர்கள் அறுக்கப்பட்டு, கழற்றிச்செல்லப்பட்டு இருந்ததையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை

இதுகுறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள் முன்பக்க இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து அதில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ,30 ஆயிரம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை அருகே இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு அட்டகாசம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story