காவலர் தேர்விற்கு முன்னாள் படை வீரர்கள்விண்ணப்பிக்கலாம்
காவலர் தேர்விற்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
காவலர் தேர்விற்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
129 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொது தேர்வு நடப்பு 2023-ம் ஆண்டிற்கு நடைபெற உள்ளது. மொத்தம் 3,359 காலிப்பணியிடங்களில் ஆண்கள் பிரிவினருக்கு 2,576 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 129 காலிபணியிடங்கள் ஆகும்.
17-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் 2023 ஆண்டு ஜூலை 1-ந்தேதி 47 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படை வீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய வழி வாயிலாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்த விவரத்தினை திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தின் தரைதளத்தில் அறை எண்.19-ல் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.