முன்னாள் படை வீரர்களின் நலனை காப்பதில் முன்னிலையில் இருக்கும்


முன்னாள் படை வீரர்களின் நலனை காப்பதில் முன்னிலையில் இருக்கும்
x

முன்னாள் படைவீரர்களின் நலனை காப்பதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலையில் இருக்கும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

முன்னாள் படைவீரர்களின் நலனை காப்பதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலையில் இருக்கும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

தேனீர் விருந்து

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், படைவீரர் கொடிநாளை முன்னிட்டு முப்படை வீரர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற படை வீரர்களின் பணியை பாராட்டும் வகையில் தேநீர் விருந்து நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

முன்னிலையில் இருக்கும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் படை வீரர் கொடி நாள் நிதி 2021 -ம் ஆண்டிற்கு ரூ.49 லட்சத்து 5 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.94 லட்சத்து 57 ஆயிரம் கொடி நாள் நிதி வசூலித்து மாநிலத்திலேயே ராணிப்பேட்டை மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்தது. 2022-ம் நிதியாண்டிற்கு ரூ.51 லட்சத்து‌ 81 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை விட அதிகமாக கொடிநாள்‌ நிதியினை வசூலித்து முன்னாள் படை வீரர்களின் நலனைக் காக்கும் மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலையில் இருக்கும்.

இன்னாள், முன்னாள் படை வீரர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து நாட்டின் பாதுகாப்பிற்காக அயராது பாடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணி அளவற்றது. ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அதிகம்பேர் இருக்கும் மாவட்டமாக வேலூர் மாவட்டம் இருந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் அதிகளவில் ராணுவ வீரர்கள் உள்ளனர்.

மேல்நிலைக்கு செல்லவேண்டும்

முன்னாள் படை வீரர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பொழுது அந்த வேலையில் இருந்து அடுத்த கட்ட பதவிகளுக்கு செல்ல தேர்வுகளை எழுத வைக்க வேண்டும். எழுதினால் கட்டாயமாக மேல் நிலைக்கு செல்லலாம். அந்த வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி அதிக அளவில் ராணுவத்தில் பணியாற்றிட ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. மேலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் லெப்டினன்ட் கர்னல்‌ கே.ஞானசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story