ஐ.டி.ஐ. மாணவர்கள் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற தனித்தேர்வு-தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தகவல்
தர்மபுரி:
தர்மபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 8-ம் வகுப்புக்கு பிறகு ஐ.டி.ஐ.யில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 10-ம் வகுப்பு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு முடித்த பிறகு ஐ.டி.ஐ.களில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழும் பள்ளிக்கல்வித்துறை மூலம் அளிக்கப்படும்.
அதே நேரத்தில் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மொழிப்பாடங்களில் தேர்ச்சி அடைய வேண்டும். அதன்படி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
எனவே 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் ஐ.டி.ஐ. படித்தவர்கள் தமிழ், ஆங்கிலம் மொழி பாடத்தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்களாக நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.