எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிந்தது: நாமக்கல்லில் மாணவ, மாணவிகள் உற்சாகம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிந்தது: நாமக்கல்லில் மாணவ, மாணவிகள் உற்சாகம்
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இந்தாண்டு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 10,954 மாணவர்கள், 9 ஆயிரத்து 708 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுதினர்.
நேற்று கடைசி தேர்வாக சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை அடித்து கொண்டனர். அதேபோல் மாணவிகள் தங்களது தோழிகளுடன் செல்பி எடுத்தும், முகத்தில் கலர் பொடிகளை தடவியும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியதையடுத்து மாணவிகள் உற்சாகமாக துள்ளி குதித்தனர். சில மாணவிகள் தோழிகளின் பிரிவை நினைத்து கண்ணீர் சிந்தியதையும் பார்க்க முடிந்தது.