அர்ச்சனை சீட்டுகள் ஸ்கேன் எந்திரம் மூலம் பரிசோதனை


அர்ச்சனை சீட்டுகள் ஸ்கேன் எந்திரம் மூலம் பரிசோதனை
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அர்ச்சனை சீட்டுகள் ஸ்கேன் எந்திரம் மூலம் பரிசோதனை

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு அர்ச்சனைக்கு ரூ.5, பால் அபிஷேகத்துக்கு ரூ.500, சிறப்பு பூஜைக்கு ரூ.1500, பால் பாயாசம் ஒரு லிட்டர் ரூ.150 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்க தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் அபிஷேக சீட்டுகள் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது பக்தர்கள் வாங்கும் சீட்டை கோவில் ஊழியர்கள் எந்திரம் மூலம் ஸ்கேன் செய்துவிட்டு கோவிலுக்குள் அனுப்புவார்கள். அவ்வாறு ஸ்கேன் செய்யும் போது அந்த சீட்டை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதே போல நாகராஜா கோவிலிலும் அர்ச்சனை மற்றும் அபிஷேக சீட்டுகள் ஸ்கேன் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 3 ஸ்கேன் எந்திரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அர்ச்சனை, அபிஷேக சீட்டுகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கோவில் ஊழியர்கள் தங்களது செல்போனிலேயே சீட்டை ஸ்கேன் செய்ய வசதியாக செல்போன் செயலியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவில் ஊழியர்கள் தங்களது செல்போனிலேயே அந்த சீட்டை பரிசோதனை செய்து கொள்ளலாம். நாகராஜா கோவில் மட்டும் இன்றி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்பட குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான 54 கோவில்களிலும் அபிஷேக சீட்டுகள் ஸ்கேன் மூலமாக பரிசோதனை செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது.


Next Story