தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு சிறப்பான சூழல்: செயிண்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி முதலீடு


தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு சிறப்பான சூழல்: செயிண்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி முதலீடு
x

தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு சிறப்பான சூழல் அமைந்திருப்பதாகவும், செயிண்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை,

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குனர்கள் குழுவினரை சந்தித்தார். அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு:-

தமிழ்நாட்டிற்கும், செயிண்ட் கோபைன் நிறுவனத்திற்குமான உறவு ஏறத்தாழ 25 ஆண்டு வரலாறு கொண்டது. 1998-ம் ஆண்டு ஜனவரியில் திருப்பெரும்புதூரில் இந்நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியாகும். தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுவரை ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது.

சிறப்பான முதலீட்டு சூழல்

இந்த நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 9-ந் தேதியன்று, திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டேன்.

தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. இதை, இம்மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டு சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே நான் கருதுகிறேன்.

ரூ.3,400 கோடி முதலீடு மற்றும் 1,150 பேருக்கு வேலை வாய்ப்பு என்று மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் பியரி ஆன்ட்ரி டி சேலண்டர், தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின் உள்ளிட்ட செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story