சின்னாறு அணை உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும்
தொல்லைக்காது பகுதியில் தடுப்பணை கட்டி பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உபரிநீரை பாலக்கோடு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொல்லைக்காது பகுதியில் தடுப்பணை கட்டி பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உபரிநீரை பாலக்கோடு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டக்குழு கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் விடுதலை விரும்பி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னசாமி வரவேற்றார். மாநில துணை செயலாளர் இந்திரஜித், தேசியக்குழு மற்றும் மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்க்குமரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு வந்து விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டும். உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு மாத வாடகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
தடுப்பணை
பஞ்சப்பள்ளி சின்னாறு அணை உபரிநீரை தொல்லைக்காது என்ற இடத்தில் தடுப்பணை கட்டி பாலக்கோடு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும். இதேபோல் பாப்பாரப்பட்டி, நாகதாசம்பட்டி, இண்டூர், பண்டஅள்ளி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும் இந்த தண்ணீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை எண்ணேகொல்புதூர் வழியாக கம்பைநல்லூர், காரிமங்கலம், மொரப்பூர், அரூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகள் விளைவிக்கும் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரமும், மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பருத்தி ஆகிய விளை பொருட்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரமும், ஒரு டன் கருப்புக்கு ரூ.4 ஆயிரமும் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் மாணிக்கம், ராஜி, வட்டார செயலாளர் பெருமாள், சிறுதானிய உற்பத்தியாளர் சங்க செயலாளர் சிவலிங்கம், உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.