ஓசூரில் ஹோஸ்டியா சங்க அலுவலக முன்பகுதி இடிக்கப்பட்டதால் பரபரப்பு
உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க ஓசூரில் ஹோஸ்டியா சங்க அலுவலக முன்பகுதி இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்
ஓசூரில் இரண்டாவது சிப்காட் பகுதியில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா) செயல்பட்டு வருகிறது. இதன் அலுவலகம் முன்பு உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகளை மின்வாரியத்தினர் மேற்கொண்டனர். இதற்கு ஹோஸ்டியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், ஆகியோரையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து திட்டத்தை கைவிட்டு, மாற்றுப்பாதையில் மின் கோபுரம் அமைக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில், மின்வாரிய அதிகாரிகள், ஹோஸ்டியா அலுவலகம் அருகே வந்து பொக்லைன் எந்திரத்தை கொண்டு அலுவலகத்தின் முன்பகுதியை இடித்து, உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளை தொடங்கினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து ஹோஸ்டியா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து வேல்முருகன், அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர், பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர், மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அலுவலர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் வேல்முருகன் கூறுகையில், எங்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக பணிகளை நிறுத்த உத்தரவிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஹோஸ்டியா சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.