தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
கோத்தகிரி அருகே தனியார் நிலத்தில் கிணறு தோண்ட எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி, ஜூன்.8-
கோத்தகிரி அருகே தனியார் நிலத்தில் கிணறு தோண்ட எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணறு தோண்ட எதிர்ப்பு
கோத்தகிரி அருகே உள்ள புடியங்கி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு மரளக்கம்பை ஆடா பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இயற்கை ஊற்றை சேகரித்து, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் ஊற்று அமைந்துள்ள இடத்தில் கிணறு வெட்ட தொடங்கினார். இதுகுறித்து அறிந்த கிராம மக்கள், கிணறு தோண்ட எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பகுதியில் கிணறு தோண்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையடுத்து கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தின் உரிமையாளர் விடுதி கட்டுவதற்காக மீண்டும் அந்த பகுதியில் கிணறு வெட்டி வருவதாக கூறப்படுகிறது.
தாசில்தார் அலுவலகத்தில் மனு
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊர்தலைவர் மாதன் தலைமையில் நேற்று கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கோத்தகிரி தாசில்தார் காயத்ரியிடம் இது சம்பந்தமாக மனு அளித்தனர். தாசில்தார் கிராம மக்களிடம், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, நிலத்தின் உரிமையாளருடன் கலந்து பேசி சுமுகமான முடிவை எடுப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் மனு அளித்தனர்.