முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு


முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு
x

முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை திடீரென விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் பாதுகாப்பாக அவர்களை அழைத்து வந்தனர்.

நீலகிரி

கூடலூர்

முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை திடீரென விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் பாதுகாப்பாக அவர்களை அழைத்து வந்தனர்.

வனவிலங்குகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி தொடங்கி மே மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். இக்காலக்கட்டத்தில் வறட்சியால் வனம் பசுமை இழந்து காணப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் வரை கோடை வெயில் மற்றும் வறட்சி அதிகமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் முதுமலை, கூடலூர் வனம் பசுமையாக காட்சியளிக்கிறது.

வாகனத்தை விரட்டியதால் பரபரப்பு

மேலும் குளுகுளு சீசனை அனுபவிக்க நீலகிரி சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக முதுமலைக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து வனத்துறை வாகனத்தில் பயணம் செய்து வனம் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை தெப்பக்காட்டில் இருந்து வனத்துறை சவாரி வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது காட்டு யானைகள் கூட்டம் நிற்பதை கண்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக வன ஊழியர்கள் சவாரி வாகனத்தை நிறுத்தினர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு காட்டு யானைகளை கண்டு ரசித்தனர். இந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு காட்டு யானை திடீரென ஆவேசமடைந்த சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து இருந்த வனத்துறையின் சவாரி வாகனத்தை திடீரென துரத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிரிழையில் உயிர்தப்பினர்

தொடர்ந்து வன ஊழியர்கள் பாதுகாப்பு கருதி சவாரி வாகனத்தை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். மேலும் காட்டு யானையும் சிறிது தூரம் ஓடி வந்து நின்றது. பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, காட்டு யானை திடீரென தாக்கும் என எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் மயிரிழையில் உயிர் தப்பியது த்ரில்லான அனுபவமாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story