அரசு பஸ்சில் ஏறி வாக்குவாதம் செய்த மூதாட்டியால் பரபரப்பு


அரசு பஸ்சில் ஏறி வாக்குவாதம் செய்த மூதாட்டியால் பரபரப்பு
x

தனது ஊருக்கு செல்கிறது என்று நினைத்து அரசு பஸ்சில் ஏறி வாக்குவாதம் செய்த மூதாட்டியை டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் சமாதானப்படுத்தி கீழே இறக்கி விட்டனர்

கோயம்புத்தூர்

கோவை

தனது ஊருக்கு செல்கிறது என்று நினைத்து அரசு பஸ்சில் ஏறி வாக்குவாதம் செய்த மூதாட்டியை, டிரைவர் மற்றும் கண்டக்டர் சமாதானப்படுத்தி கீழே இறக்கி விட்டனர்.

அரசு டவுன் பஸ்

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டவுன் பஸ்களில் பெண்கள் பயணிக்க இலவசம் என்பதால் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் உக்கடம், மதுக்கரை வழியாக பாலத் துறை செல்லும் டவுன் பஸ் (எண்50) டெப்போவுக்கு செல்வதற்காக நின்று கொண்டு இருந்தது.

அந்த பஸ்சில் 75 வயதான மூதாட்டி ஒருவர் திடீரென்று ஏறி அமர்ந்தார்.

அதில் வேறு பயணிகள் இல்லாததால் மற்ற இருக்கைகள் காலியாக இருந்தன. பஸ்சில் ஏறிய மூதாட்டியிடம் கண்டக்டர் வினோத், எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் பச்சாபாளையம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

மூதாட்டி வாக்குவாதம்

அவரிடம் பஸ் பணிமனைக்கு செல்கிறது, நீங்கள் வேறு பஸ்சில் ஏறி ஊருக்கு செல்லுங்கள் என்று கண்டக்டர் கூறினார். அதை ஏற்க மறுத்த மூதாட்டி நான் கீழே இறங்க மாட்டேன், பஸ்சை மேற்கு நோக்கி பச்சாபாளையத்துக்கு விடு என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், பச்சாபாளையத்துக்கு செல்லாது பணிமனைக்குதான் செல்கிறது, நீங்கள் பஸ் மாறி ஏறி விட்டீர்கள், கீழே இறங்கி வேறு பஸ்சில் ஏறி செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் அதை கேட்காத அந்த மூதாட்டி, இந்த பஸ் பச்சாபாளையத்துக்கு செல்லாது என்று எழுதி கொடு... நான் கீழே இறங்கி செல்கிறேன் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

சமாதானப்படுத்தி இறக்கினர்

உடனே அங்கு வந்த டிரைவரும், அந்த மூதாட்டியை கீழே இறங்க சொல்ல, அவர், நான் இறங்கி செல்ல மாட்டேன் என்றுக்கூறி அடம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் அந்த மூதாட்டியிடம் பக்குவமாக பேசி சமாதானப்படுத்தி மூதாட்டியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.

அரசு பஸ்சில் இருந்து கீழே இறங்க மறுத்து அடம் பிடித்த மூதாட்டியிடம் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் கெஞ்சி பேசிய காட்சியை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். அது வைரலாக பரவி வருகிறது.


Next Story