ஈரோட்டில் பரபரப்புவடமாநில வாலிபர் எரித்து கொலையா?போலீசார் விசாரணை
ஈரோட்டில், வடமாநில வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில், வடமாநில வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில வாலிபர்
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஆலையில் கொட்டகை அமைத்து வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். கடந்த 13-ந்தேதி கொட்டகைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 4 வாலிபர்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.
இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் கென்ட் (19) என்பவர் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது அறையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எரிந்த நிலையில்...
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஈரோடு வைராபாளையம் தாசில்தார் தோட்டத்தில் சிமெண்டு (ஹலோ பிளாக்) கற்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். இங்கு சுமைதூக்கும் தொழிலாளியாக அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்த அம்புரோஸ் மகன் நிகில் (வயது 23) என்பவர் கடந்த 1½ மாதமாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் நிகில் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சக தொழிலாளர்கள் அவருடைய அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் நிகில் பிணமாக குப்புற கிடந்தார். நிகிலின் முகம் மற்றும் கால் பகுதியை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி இருந்தன.
கொலையா?
இதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நிகிலின் உடலுக்கு அருகே பீடி துண்டு மற்றும் காலி மதுபான பாட்டில் மட்டும் கிடந்தன.
இதைத்தொடர்ந்து போலீசார் நிகிலின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து, நிகில் மதுபோதையில் தூங்கியபோது அணைக்கப்படாத பீடி துண்டில் இருந்த தீ பட்டு உடல் கருகி இறந்தாரா?, அல்லது தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா?, இல்லை வேறு யாரேனும் தீ வைத்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.