பெரியகுளத்தில் பரபரப்பு:சாலையில் மது பாட்டில்களை அடுக்கி வைத்து தகராறு செய்த தொழிலாளி
பெரியகுளத்தில் சாலையில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து தகராறு செய்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அக்கீம் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அதே பகுதியில் சாலையோரத்தில் இருந்த திண்ணை ஒன்றில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார். மேலும் மதுபாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கேட்டதற்கு அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் பெரியகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு போலீசார் எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் போலீஸ் நிலையத்தை விட்டு அக்கீம் வெளியே வந்தார். அப்போது போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்த முத்துக்குமார் (50) என்பவரை, அங்கிருந்த பாத்திரங்களை எடுத்து அவரது தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த முத்துக்குமார், பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கீமை கைது செய்தனர்.