போடியில் பரபரப்பு:போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டியிடம் 14½ பவுன் நகை பறிப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


போடியில் பரபரப்பு:போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டியிடம் 14½ பவுன் நகை பறிப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடியில் போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டியிடம் 14½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபா்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

போலீஸ் அதிகாரிகள்

தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 72). நேற்று முன்தினம் மாலை இவர், அதே பகுதியில் 8-வது தெருவில் வசித்து வரும் தனது மகன் நவீன்குமாரை பார்ப்பதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆள் இல்லாத இடத்திற்கு சென்றதும் அவரை மோட்டார்சைக்கிளில் வந்த நபர்கள் மறித்தனர். பின்னர் அவர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்றும், பெண்கள் இவ்வளவு நகைகளை அணிந்து வெளியே செல்லக்கூடாது என்று கூறினர். மேலும் நகைகளை அணிந்து சென்றால் திருடர்கள் பறித்து சென்றுவிடுவார்கள் என்றனர்.

14½ பவுன் நகைகள் பறிப்பு

இதனால் நகைகளை கழற்றி எங்களிடம் கொடுங்கள் என்று கூறினர். இதை உண்மை என நம்பிய வெண்ணிலா தான் கழுத்தில் அணிந்திருந்த 12½ பவுன் தாலி சங்கிலி, கையில் அணிந்திருந்த தலா 2 பவுன் வளையல்களையும் கழற்றி அவர்களிடம் கொடுத்தார். பின்னர் அவர்கள் அந்த நகைகளை ஒரு பேப்பரில் வைத்து மடிப்பது போல் நடித்தனர். இதற்கிடையே அவர் அந்த பக்கம் திரும்பியதும் கண் இ்மைக்கும் நேரத்தில் போலி நகைளை வைத்து மடித்து வெண்ணிலாவிடம் அவர்கள் கொடுத்தனர்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற வெண்ணிலா அந்த பேப்பரை பிரித்து நகைகளை எடுத்து பார்த்தார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த அவர் இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில், வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற கோடு போட்ட சட்டையும் அணிந்த இருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டியிடம் நகைகளை பறித்து சென்ற அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியது.


Next Story