கைதான போலந்து நாட்டை சேர்ந்தவர் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்


கைதான போலந்து நாட்டை சேர்ந்தவர் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்
x

வேதாரண்யம் அருகே சீன படகு கரை ஒதுங்கியது. அதில் வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே சீன படகு கரை ஒதுங்கியது. அதில் வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது.

கரை ஒதுங்கிய சீன படகு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த முனங்காடு பகுதியில் நேற்று முன்தினம் காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரப்பர் படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கயல்விழி, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் உளவுத்துறை போலீசார் அங்கு வந்து படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

டிரோன் கேமரா மூலம் சோதனை

நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் 'துளி' அங்கு வரவழைக்கப்பட்டது. அது படகு கரை ஒதுங்கி கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் டிரோன் கேமரா மூலம் சோதனை நடத்தினர்.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து இந்த படகில் யாராவது வந்தார்களா? அல்லது உளவாளிகள் வந்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் அதிகாரிகள் மீனவ கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளை அழைத்து ஊருக்குள் வெளிநபர்கள் சுற்றித்திரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

விடிய, விடிய விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறையில் இருந்து சந்தேகப்படும் வகையில் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மீனவர்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் சிறிய கத்தி, செல்போன், கண்ணாடி, பிஸ்கட் பாக்கெட், செல்போன் சார்ஜர், டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் விடிய, விடிய நடந்தது.

போலந்து நாட்டை சேர்ந்தவர்

விசாரணையில் அந்த நபர் போலந்து நாட்டை சேர்ந்த வாத்தீஸ் வாப்(வயது 40) என்பதும், இவர் இலங்கையில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்வதற்காக படகில் வந்தபோது சிக்கிக்கொண்டதும் தெரிய வந்தது. அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

போலந்து நாட்டை சேர்ந்த வாத்திஸ்வாப், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு மதுபோதையில் அடிதடி வழக்கில் சிக்கிய அவரை போலீசார் கைது செய்து 3 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

2,000 டாலர் அபராத தொகையை செலுத்தி சிறையில் இருந்து அவர் வெளியே வந்துள்ளார். ஆனால் இந்த வழக்கு முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அவரது பாஸ்போர்ட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சத்துக்கு படகு வாங்கி உள்ளார்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா முடக்கத்தால் இலங்கை கொழும்பில் சுற்றித்திரிந்துள்ளார். இதையடுத்து சொந்த நாடான போலந்துக்கு செல்ல முடிவு செய்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரெயிலில் வந்துள்ளார். அங்கிருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கிருந்து டெல்லியில் உள்ள போலந்து நாட்டு தூதரகம் மூலம் சொந்த நாட்டுக்கு சென்று விடலாம் என முடிவு எடுத்துள்ளார். அதற்காக ரூ.1 லட்சத்துக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகை வாங்கி அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக கோடியக்கரைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்துள்ளார்.

பணம் பரிமாற்றம்

பின்னர் அவர் வந்த படகை முனங்காட்டில் விட்டு விட்டு அங்கிருந்து 3 கி.மீ தூரம் நடந்தே சென்று ஆறுகாட்டுத்துறைக்கு வந்து அங்குள்ள கருவைக்காட்டில் படுத்து தூங்கியுள்ளார். இரவு 9 மணி அளவில் சென்னை செல்வதற்கு ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களிடம் விவரம் கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவர் அனைத்து பணபரிமாற்றமும் செல்போன் மூலமே செய்துள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்

வாத்தீ்ஸ் வாப்பிடம் பாஸ்போர்ட்டு மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அவரிடம் மத்திய உளவுத்துறை போலீசார், கடற்படையினர், கடலோர காவல் படை போலீசார், கியூபிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றனர்.


Next Story