ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம்
ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூரை சேர்ந்த வக்கீல் பரமேஸ்வரன்:- ஆன்லைன் சூதாட்டம் என்பது இளைஞர்களை தனிமைப்படுத்துகிறது. அவர்களுக்கு சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக தலைகுனிவை ஏற்படுத்துகிறது. முக்கியமாக தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தன்னை மறந்து, தன்னை சுற்றியுள்ளவர்களையும் மறந்து, குடும்பம், உறவுகளை மறந்து, ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி சீரழிந்து விடுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு முதலில் அதனால் வருவாய் வருவது போன்ற ஒரு பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் அவர்களின் ஆர்வம் தூண்டப்படுகிறது. பின்னர் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து, அவர்களது அனுமதி இல்லாமலேயே பணத்தை எடுத்து விடுகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்பட்டால், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். சூதாட்டம் தடை சட்டமும் காலாவதியாகி விட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் அளித்தால், பல குடும்பங்கள் நலம் பெறும். உயிரிழப்புகளும் தடுக்கப்படும்.
பணம் பறிபோவதால் தற்கொலை
உடையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் கெபி.பிரம்மா:-
ஆன்லைன் சூதாட்டம் விளையாட பல மாணவர்களுக்கு ஆசைதான். ஆனால் அந்த விளையாட்டால் ஏற்படும் விளைவை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இந்த விளையாட்டில் ஈடுபடும்போது, ஆரம்பத்தில் நமக்கு பணம் கிடைப்பதுபோன்று தெரியும். பின்னர் நாம் சம்பாதித்த பணம் மட்டுமின்றி, நம் வீட்டில் இருந்து எடுத்து வந்த பணமும் சேர்ந்து பறிபோகும். இவ்வாறு பணத்தை இழந்தவர்கள் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
அடிமை ஆகிறார்கள்
தா.பழூரை சேர்ந்தவரான ஐகோர்ட்டு வக்கீல் இளையராஜா:- ஆன்லைன் சூதாட்டம் பணம் இழப்பு மட்டுமல்லாது, உயிர் இழப்பையும் ஏற்படுகிறது. முதலில் சூதாட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்து, அதன் மூலம் ஆசை காட்டி பின்னர் மோசம் செய்வது போல் ஏமாற்றி அவர்களை சூதாட்டத்திற்கு அடிமை ஆக்குகிறார்கள். எனவே இந்த சூதாட்டம் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டும். தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பணத்தை இழக்கின்றனர்
பெரம்பலூர் மாவட்டம், தொண்டப்பாடியை சேர்ந்த கருப்புதுரை:- ஆன்லைன் சூதாட்டம் ஈடுபவர்களுக்காக அனைவருக்கும் இலவசமாக முதலில் பணம் அனுப்பியுள்ளதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். இதனால் ஆர்வம் ஏற்பட்டு இளைஞர்கள் பலர் விளையாட கற்றுக்கொண்டு பணத்தை இழக்கின்றனர். இருப்பினும் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி எவ்வளவு பணத்தை இழக்கிறோம் என்பது பற்றிய எண்ணமின்றி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழந்து விடுகின்றனர். இவ்வாறு பணத்தை இழந்து பலர் மன உளைச்சல் ஏற்பட்டு குடிபோதைக்கு அடிமையாகின்றனர். சிலர் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.