சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்-ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ம.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட ம.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கு.சின்னப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் தலைமை தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளரும், உறுப்பினர் சேர்ப்பு மேலிட பார்வையாளருமான திருச்சி எஸ்.ஆர்.செந்தில் கலந்து கொண்டு பேசினார். மேலும் அவர் பெரம்பலூர் மாவட்டத்தில் பூர்த்தி செய்த புதிய உறுப்பினர் சேர்ப்பு படிவங்களை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெற்று கொண்டார். மாவட்டத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். இயற்கை சூழலை சீரழித்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்றி, மண் வளத்தை காத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாளந்துறை-கீழக்கல்பூண்டி இடையே உள்ள வெள்ளாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். அகரம்-தைக்கால் இடையே உள்ள கல்லாற்றில் பாலம் அமைத்து தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தையும், அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு ம.தி.மு.க. தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story