வனத்துறை பொறுப்பிலிருந்து விடுவித்துதாமிரபரணி ஆற்றில் சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும்:பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தல்
வனத்துறை பொறுப்பிலிருந்து விடுவித்து தாமிரபரணி ஆற்றில் சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
வனத்துறை பொறுப்பிலிருந்து விடுவித்து தாமிரபரணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
விளாத்திகுளம் தாலுகா கலைஞானபுரம் கிராம மக்கள், சி.ஐ.டி.யு சங்கரன், முனியசாமி உள்ளிட்டோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கலைஞானபுரம் பகுதியில் உப்பள தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம். அந்த பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக உப்பளங்களை எடுப்பதாக கூறுகிறார்கள். உப்பளங்களை எடுப்பதால் நாங்கள் வாழ வழியின்றி ஊரை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் உப்பளங்கள் இல்லாத தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சீமை கருவேல மரம்
தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் ஆலோசகர் வியனரசு, பொதுச் செயலாளர் அய்கோ மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட பகுதியில் தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் வனத்துறையின் பொறுப்பில் இருந்து ஆற்றை விடுவிக்க வேண்டும. மாவட்ட பகுதியில் ஆற்றில் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும். மருதூர் அணைக்கு கிழக்கே இருந்து திட்டமிடப்பட்டு உள்ள புறவழிக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குடிநீர் வடிகால் வாரியம் பொதுப்பணித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.150 கோடிக்கு அதிகமான நிலுவைத் தொகையை வசூலித்து தாமிரபரணி பராமரிப்பு, பாசன திட்ட மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகி நாராயணசாமி தலைமையில், மாற்றுத்திறனாளி பெண் ஜோதி லட்சுமி என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் மாற்றுத்திறனாளி. கோவில்பட்டி தாலுகா பிச்சைத்தலைவன்பட்டி கிராமத்தில் அரசு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறேன். அந்த இடத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.