ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்த விலக்கு


ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்த விலக்கு
x

தமிழகத்திலேயே முதன்முறையாக ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து கருப்பம்புலத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

தமிழகத்திலேயே முதன்முறையாக ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து கருப்பம்புலத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீட்டு வரி விலக்கு

கருப்பம்புலம் ஊராட்சியில் வசிக்கும் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிப்பது. இந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியை பொதுமக்களின் ஒத்துழைப்போடு மாதிரி பள்ளியாக மாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் அனைத்தும் துண்டு பிரசுரம் அடித்து வீடு, வீடாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கிராம சபை கூட்டம் நடந்த இடத்தில் வரவு-செலவு கணக்கு விவரம் பெரிய அளவில் விளம்பர தட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் படித்து சென்றனர். இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து சென்றனர்.

தமிழகத்திலேயே முதன்முறையாக...

கருப்பம்புலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்காக இரவு, பகலாக போராடும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்திலேயே முதன் முறையாக வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story