தபால் தலைகள் கண்காட்சி
பழனி அரசு அருங்காட்சியகத்தில் தபால் தலைகள் கண்காட்சி நடைபெற்றது.
பழனி அரசு அருங்காட்சியகத்தில் வரலாறு சார்ந்த புகைப்படங்கள், பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாதமும் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதம் தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், இந்திய சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட தபால் தலைகள், தற்போது பயன்பாட்டில் உள்ள தபால் தலைகள் என பல்வேறு தபால் தலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறுகையில், தேசிய தபால் தினத்தையொட்டி தபால் தலை கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு தபால் தலைகள் என சுமார் 1,500 தபால் தலைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அஞ்சல் துறையை பற்றிய விவரங்கள், சேவைகள் ஆகியவை குறித்த விவரமும் உள்ளது. இந்த தபால் கண்காட்சி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது என்றார்.