வாணியம்பாடியில் சிறுதானிய உள்ளூர் பயிர் ரக கண்காட்சி
வாணியம்பாடியில் சிறுதானிய உள்ளூர் பயிர் ரக கண்காட்சி நடந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் சிறுதானிய உள்ளூர் பயிர் ரக கண்காட்சி நடந்தது.
வாணியம்பாடியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உயர்தர சிறுதானிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ஏ.பாலா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
அனைவரும் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். நல்ல முறையில் விவசாயம் செய்து வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற வேண்டும்'' என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் கைசர் அகமது, கல்லூரி முதல்வர் ரேணு உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.