பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி
பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி திருப்பத்தூரில் நடக்கிறது.
தமிழக அரசின் 2022-23- ஆம் ஆண்டுக்கான பிரத்யேக வேளாண் பட்ஜெட்டில் 'மரபணு பன்முகத்தன்மை கண்காட்சிகள்" மவாட்ட அளவில் ஆண்டுக்கு மூன்று முறையாவது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
கண்காட்சியில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தனித்துவமான பல்வேறு உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர் வகைகளை விரும்பத்தக்க குணாதிசயங்களுடன் காட்சிப்படுத்தவும், அவற்றை இம் மாவட்ட விவசாயிகளிடையே பிரபலபடுத்தவும், இதுதொடர்பான சாகுபடி தொழில்நுட்கங்களை விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் நேரடி கலந்துரையாடல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் பராம்பரிய பயிர் சாகுபடி செய்து உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை காட்சிபடுத்தவும் மற்றும் விற்பனை செய்யவும் ஏதுவாக விற்பனையகம் அமைக்கப்படும். இக்கண்காட்சியில் விவசாயிகளால் அறிமுகப்படுத்தப்படும் உள்ளூர் மற்றும் பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கும் மற்றும் தேர்வு செயல்முறைக்கு எடுத்துக்கொள்ள பரிசீலிக்கப்படும்.
எனவே அனைத்து விவசாயிகள் கண்காட்சியில் பங்குபெறும் பொருட்டு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பங்குபெற்று பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.