கிரிவலப்பாதையில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள்-சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆய்வு
கிரிவலப்பாதையில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணிகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆய்வு செய்தார்.
கிரிவலப்பாதையில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் விரிவாக்க பணிகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி.ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை காஞ்சிரோடு கிரிவலப்பாதையில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பத்தின் பேரில் திருப்பதிக்கு இணையாக அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணி தரமற்ற முறையில் நடப்பதாகவும், இங்கு எடுக்கப்படும் மண் விற்பனை செய்யப்படுவதாக தவறான தவவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண் நெடுஞ்சாலை துறையால் எடுக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினரால் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், பொய்யான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண் ஆன்மிக மண். இதை யாரும் விற்க மாட்டார்கள். இந்த மண் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதம் பட்ட மண். சிவன் சொத்துக் குலநாசம் என்பார்கள். விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இதை விற்க மாட்டார்கள்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்த ஒப்பந்த நிறுவனங்கள் தான் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. பொய்யான தகவல் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் எங்களை வழி நடத்தி உள்ளார். அதன்படி தான் நாங்கள் நேர்மையுடன் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.