வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை


வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை
x

வேலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டக்குழு தலைவர் மு.பாபு தெரிவித்தார்.

வேலூர்

திட்டக்குழு கூட்டம்

வேலூர் மாவட்ட திட்டக்குழுவின் முதல்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திட்டக்குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டரும், திட்டக்குழு துணைத்தலைவருமான குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட திட்ட அலுவலர் வேதநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், புதிதாக செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் பற்றியும், மாவட்ட திட்டக்குழு மூலம் செயல்படுத்தப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

வளர்ச்சி திட்டப்பணிகள்

மாவட்ட அளவிலான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி ஒருங்கிணைத்து மற்றும் செயல்படுத்திட ஏதுவாக மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 திட்டக்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதில், நகராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் திட்டக்குழு தலைவர் மு.பாபு நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் தற்போது நடைபெறாமல் உள்ள பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சாலை வசதி, குடிநீர், பள்ளிகள் சீரமைப்பு, மேம்பாலம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாவட்டம் முழுவதும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநில திட்டக்குழு தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தெரிவித்து நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


Next Story