மாடுபிடிக்க அனுபவம் உள்ளவர்களை பயன்படுத்த வேண்டும்


மாடுபிடிக்க அனுபவம் உள்ளவர்களை பயன்படுத்த வேண்டும்
x

நெல்லை மாநகராட்சி பகுதியில் மாடுபிடிக்க அனுபவம் உள்ளவர்களை பயன்படுத்த வேண்டும் என தமிழ் புலிகள் கட்சியினர் மேயரிடம் மனு கொடுத்தனர்

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். செயற் பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், மண்டல தலைவர் பிரான்சிஸ், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்புலிகள் கட்சியினர் மாவட்ட நிதிச் செயலாளர் தமிழ்மணி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை மாநகர பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்கு ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மாடு பிடிக்கும் பயிற்சி இல்லாத தூய்மைபணியாளர்களை பயன்படுத்துவது தவறான நிகழ்வாகும். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்டு பிடிக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

கவுன்சிலர் வசந்தா கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சி 4-வது வார்டு பாளையங்கோட்டை திருஞானசம்பந்த நாயனார் தெரு முதல் பார்வதி அம்மன் கோவில் தெரு வரை உள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றிவிட்டு புதிதாக குடிநீர் குழாய் அமைத்து குடிதண்ணீர் சீராக வழங்க வேண்டும். காயத்ரி அம்மன் கோவில், பொட்டல், படப்பகுறிச்சி ஆகிய பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும், என்று கூறியுள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டை அருந்ததியர் தெருவில் விளையாட்டு பூங்கா அமைத்து தரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதி மக்கள் அந்தப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்


Next Story