பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகளில் காலாவதி தேதி அவசியம்;கலெக்டர் அறிவுறுத்தல்
பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகளில் காலாவதி தேதி அவசியம் என்று கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தி உள்ளார்.
நாகர்கோவில்,
பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகளில் காலாவதி தேதி அவசியம் என்று கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காலாவதி தேதி...
பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இனிப்பு பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகர்கள், அந்த பாக்சில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
இனிப்புகளில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை சேர்க்க வேண்டும். அதிகப்படியான வண்ணங்களை சேர்த்தலைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விவரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்க வேண்டும்.
தரமான சமையல் எண்ணெய்
அனைத்து வகையான கடைகளும், தரமான சமையல் எண்ணெயை உணவு பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். எண்ணெய் கொதி நிலையில் இருக்கும்போது புதிய சமையல் எண்ணெயை அதனுடன் கலக்கக்கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி, உபயோகப்படுத்தக்கூடாது. அதனை பயோ டீசலாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே அதற்கான கருவிகள் மூலம் தினசரி பரிசோதிக்கப்பட்டு, பெறப்பட்ட எண்ணெய்க்கான தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வணிகர்களுக்கு வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தில் அனைவரும் இணைந்து பயன்பெறலாம்.
இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்.
மருத்துவ சான்றிதழ்
உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் ஆகியவற்றை அணிய வேண்டும். உணவு பொருட்களை கையாளுபவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், தொகுப்பு எண், தயாரிப்பாளரின் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் ஆகியவை லேபிளில் தெளிவாகத் தெரியும்படி அச்சிடப்பட வேண்டும்.
கடும் நடவடிக்கை
பண்டிகை கால இனிப்பு வகைகளை பேக்கிங் செய்யும் போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது. அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் தெரிவிக்கலாம்
உணவு தயாரிப்பாளர்கள், அனைவரும் முறையான பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகை பலகாரங்களை வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மேலும் நுகர்வோர்கள் உணவு பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 என்ற எண்ணிலோ, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண் 04652 276786 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.