பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்
பொது இடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் விளக்கம் அளித்துள்ளார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பார்த்தீனியம் செடிகள்
பார்த்தீனியம் என்கிற களைச்செடி 1950-ம் ஆண்டுகளில் கோதுமை தானியங்கள் மூலம் நமது நாட்டிற்குள் நுழைந்தது. 1956-ல் மராட்டிய மாநிலத்தில் புனே நகரில் முதன் முதலாக காணப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விவசாயம், விவசாயம் அல்லாத நிலங்கள் அனைத்திலும் பரவலாக காணப்படுகிறது.
பொதுவாக இந்த செடி விதை மூலம் பரவும். ஒரு செடி, தன் வாழ்நாளில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது. இந்த விதைகள் மிகவும் சிறியதாக இருக்கும். ஆகையால் காற்றில் எளிதில் பரவக்கூடியது. மேலும் மழை மற்றும் பாசன நீர், மனித செயல்பாடுகள் மூலமும் பரவக்கூடும். அறுபட்ட செடிகளில் மீதமுள்ள தண்டு மற்றும் வேர் பகுதிகளிலிருந்து மீண்டும் வளரக்கூடிய தன்மை உடையது.
பக்க விளைவுகள்
இந்த செடிகள் ரசாயன வெளியீட்டால் பிற செடிகளை வளர விடாது என்பதால், போட்டியின்றி விரைவாகவும், பரவலாகவும் வளரக்கூடியவை. பொது இடங்கள், விளைநிலங்களில் பரவலாக காணப்படும் இந்த செடி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த செடியினால் பலருக்கு தோல் மற்றும் சுவாசக்குழாய் நோய்கள் ஏற்படும். விளை நிலங்களில் இந்த செடிகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும்.
பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனிய செடிகளை ஆட்களை கொண்டு கையுறை அணிந்து அகற்றி விட வேண்டும். ஆட்களை கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன், பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கட்டுப்படுத்துவது எப்படி?
பார்த்தீனிய செடிகளை கட்டுப்படுத்த ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, நாய்வேளை, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இந்த செடிகளின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுத்து விடுகிறது. மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். ஆகையால் மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.
அதிகமாகவும், மீண்டும், மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில் உடனடியாக கட்டுப்படுத்த அட்ரஸின், 2, 4-டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரிபுசன் போன்ற களைக்கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.