குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
திருமருகல் அருகே குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சி பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார் வரவேற்றார்.
நெல் ரகங்கள்
கூட்டத்தில் சிக்கல் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் வல்லுனர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் குறுவை சாகுபடிக்கேற்ற நெல் ரகங்கள், விதைத் தேர்வு, விதை நேர்த்தி செய்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நெற்பயிருக்கு உர மேலாண்மை, களை நிர்வாகம், உயிர் உரங்களின் பயன்பாடு, பூச்சி நோய் நிர்வாகம், மானியங்கள், நெற்பயிரில் குறைந்த செலவில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி அலுவலர் சரவண அய்யப்பன், ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் ஜாகீர் நன்றி கூறினார்.