பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 அறைகள் இடிந்து தரைமட்டம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது.
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன்(வயது 54) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலையின் உரிமத்திற்கான தேதி நிறைவு பெற்றதால் மீண்டும் புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெறவில்லை.
ஆனால் ஆலையில் ஒரு அறையில் மட்டும் பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருளான சல்பர் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
3 அறைகள் தரைமட்டம்
இந்தநிலையில் இந்த பகுதியில் லேசான மழை பெய்தது. இதனால் சல்பர் வைக்கப்பட்டிருந்த அறையில் மழை நீர் பட்டதால் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமானது. மேலும் இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தொழிற்சாலையில் பணிகள் எதுவும் நடைபெறாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.