திருமண நிகழ்ச்சியில் வெடி வெடித்து 3 வீடுகள்-மோட்டார் சைக்கிள் சேதம்
தூத்துக்குடி அருகே திருமண நிகழ்ச்சியில் வெடி வெடித்து 3 வீடுகள்-மோட்டார்சைக்கிள் சேதம் அடைந்தன. மேலும் வாணவெடி வெடித்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி அருகே திருமண நிகழ்ச்சியில் வெடி வெடித்து 3 வீடுகள்-மோட்டார்சைக்கிள் சேதம் அடைந்தன. மேலும் வாணவெடி வெடித்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
வெடி விபத்து
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் குரூஸ் என்பவர் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தாளமுத்துநகரை சேர்ந்த சிங்காரசெல்வம் (வயது 58) என்பவர் வாணவெடிகளை வெடித்துக் கொண்டு இருந்தார்.
அவர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏராளமான வெடிகளை வைத்து இருந்தார். அதன் அருகே நின்றபடி வெடி வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகளில் தீப்பொறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறத்தொடங்கின.
வீடுகள் சேதம்
அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கும் வெடித்து தீப்பிடித்தது. இந்த வெடிவிபத்தில் அந்த பகுதியில் இருந்த 3 வீடுகளின் ஓடுகள் உடைந்து நொறுங்கி சேதம் அடைந்தன. மோட்டார் சைக்கிளும் முற்றிலும் சேதம் அடைந்தது.
அதே நேரத்தில் சிங்கார செல்வம் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.