வாண வேடிக்கையின் போது வெடி விபத்து; வியாபாரி உள்பட 8 பேர் காயம்
நாகர்கோவிலில் ஆலய திருவிழாவின் போது வாணவேடிக்கை நடந்தபோது வெடி விபத்தில் கடலை வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் ஆலய திருவிழாவின் போது வாணவேடிக்கை நடந்தபோது வெடி விபத்தில் கடலை வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆலய விழாவில் பட்டாசு விபத்து
நாகர்கோவில் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 23-ந் தேதி அன்று திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி தற்காலிக கடைகள் கோவில் வளாகத்தில் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன.
9-ம் திருவிழாவையொட்டி நேற்று இரவு ஆலயத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது ஆலயத்தின் வளாகத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் வாண வேடிக்கையின் போது பட்டாசு திடீரென சரிந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் மேல் நோக்கி செல்லாமல் ஆலய வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே சரமாரியாக பாய்ந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த சமயத்தில் சிலர் மீது வெடி பட்டு வெடித்தது. இதனால் அவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
8 பேர் காயம்
இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கடலை வியாபாரி அப்துல் (வயது 42) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதுபோக மேலும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனே விபத்தில் காயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆசாரிப்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.