வெடிபொருட்கள் வெடித்து தொழிலாளி உடல் சிதறி பலி
தொப்பம்பட்டி அருகே கிணறு தோண்டும் பணிக்காக வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியானார்.
குடிசையில் வெடிபொருட்கள்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு சொந்தமான தோட்டம் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே வடபருத்தியூரில் உள்ளது. இந்த தோட்டத்து பகுதியில் விவசாய பயன்பாட்டுக்காக கிணறு அமைக்க செல்லத்துரை முடிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் உடுமலை அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணிகண்டன் (வயது 33) உள்பட 5 பேர் ஈடுபட்டனர்.
கிணறு தோண்டும் பணிக்காக, தோட்டத்து பகுதியில் குடிசை அமைத்து அதற்கான பொருட்களை வைத்திருந்தனர். பாறைகளை தகர்ப்பதற்கான வெடிபொருட்களும் இந்த குடிசையில் வைத்திருந்ததாக தெரிகிறது.
உடல் சிதறி பலி
இந்தநிலையில் நேற்று காலை கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென குடிசை பகுதியில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து விவசாயிகள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
குடிசையின் மேற்கூரை சேதமாகி கிடந்தது. மேலும் அருகில் உடல் சிதறிய நிலையில் மணிகண்டன் பிணமாக கிடந்தார். இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் உடனடியாக கீரனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் ஒட்டன்சத்திரம் வருவாய்த்துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
விசாரணையில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை குடிசையில் வைத்திருந்தபோது, அவை வெடித்ததில் மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. இந்த வெடிபொருட்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டதா?, எந்த வகையான வெடிபொருட்கள்? என்பது குறித்த விசாரணையில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொப்பம்பட்டி அருகே கிணறு தோண்டும் பணிக்காக வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.