அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்
உடுமலை
உடுமலை வழியாக மதுரைக்கு சென்றுவரும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 3மாதங்களுக்கு தினசரி ஒட்டன்சத்திரத்தில் நின்றுசெல்லும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16343) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு, அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு வந்து, அங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு உடுமலைக்கு காலை 6.33 மணிக்கு வந்து சேரும். (இந்த ரெயில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்திற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுகிறது). பின்னர் உடுமலையில் இருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சென்று சேரும்.
அதேபோன்று மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் இந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16344) திண்டுக்கல், பழனி வழியாக உடுமலைக்கு மாலை 6.58 மணிக்கு வந்து 7 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, எர்ணாகுளம் வழியாக அடுத்தநாள் காலை திருவனந்தபுரம் சென்று சேரும்.
ஒட்டன்சத்திரம்
இந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை ஒட்டன்சத்திரத்தில் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரெயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று அந்த பகுதிகளைச்சேர்ந்த பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து பயணிகள் வருகை எப்படி உள்ளது என்பதற்காக, பரிசோதனை அடிப்படையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 16-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு தினசரி ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, உடுமலை வழியாக மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ஒட்டன்சத்திரத்திற்கு காலை 7.49 மணிக்கு வந்து, அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.
மறுமார்க்கத்தில் மாலை 4.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ஒட்டன்சத்திரத்திற்கு மாலை 5.29 மணிக்கு வந்து அங்கிருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரத்திற்கு அடுத்த நாள் காலை சென்று சேரும்.