கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
சிறப்பு ரெயில் சேவை
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வரை செல்லும் தன்பாத்-கோவை மற்றும் கோவை-தன்பாத் ஆகிய வாராந்திர சிறப்பு ரெயில்கள் ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் பயணிகளின் நலன் கருதி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரெயில்களின் சேவை காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் இந்த ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தன்பாத்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-03357) நாளை மறுநாள் முதல் மார்ச் மாதம் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் தன்பாத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பொக்கோரோ ஸ்டீல் சிட்டி, மூரி, ரஞ்சி, ஹட்டியா, சாம்பல்பூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் இரவு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும்.
மறுமார்க்கம்
இதேபோல் மறு மார்க்கத்தில் கோவை தன்பாத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-03358) வருகிற 8-ந் தேதி முதல் மார்ச் மாதம் 29-ந் தேதி வரை புதன்கிழமைகளில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 12.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, நெல்லூர் வழியாக வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தன்பாத் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.