முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு


முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாநில இளைஞர் விருது

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இந்த ஆண்டுக்கான (2023) விருது அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் வழங்கப்பட உள்ளது.

தகுதிகள்

இந்த விருது பெற விண்ணப்பிப்பவர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில், அதாவது 1.4.22 முதல் 31.3.23 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

காலஅவகாசம் நீட்டிப்பு

இந்த விருதுக்கு ஏற்கனவே கடந்த 31.5.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இணையதளம் மூலம் விணணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 20-ந் தேதி மாலை 4 மணி வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவின் மூலம் பரிந்துரை செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு 22.7.23 அன்று அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story